வாழ்க்கையின்
ஒவ்வொரு வினாடியும் மிகப் பெறுமதியானதாகும். அதை
விரயம் செய்வதும் பிரயோசனமற்ற விவகாரங்களுக்காகப் பயன்படுத்துவதும் தனிமனிதனதும்
சமுதாயத்தினதும் இம்மை, மறுமை வாழ்வை
பாழ்படுத்திவிடும்.
நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள் "ஒருவர்தனக்கு தொடர்பற்றவற்றை விட்டு விலகியிருப்பது அவரிடம் சிறந்த இஸ்லாம் இருக்கின்றது என்பதற்கு அடையாளமாகும். (திர்மிதி)
நமக்கு
வழங்கப்பட்டிருக்கும் காலத்தை விட நாம் நிறைவேற்ற வேண்டிய கடமைகளும் பொறுப்புகளும்
அதிகமாகும். அக்கடமைகளை அதற்கே உரியகாலத்தில் நிறைவேற்றும் போதே அவை மிக்க
பயனுள்ளதாக அமையும். இதனைத்தான் உமர் (ரலி) அவர்களின் கூற்று நமக்கு
உணர்த்துகின்றது.
"பகல் நேரத்தில் நிறைவேற்றவேண்டிய சில கடமைகள் இருக்கின்றன. அவற்றை அல்லாஹ் இரவில் அங்கீகரிப்ப தில்லை. அவ்வாறே இரவு நேரத்தில் அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற வேண்டிய சில கடமைகள் இருக்கின்றன. அவற்றை அல்லாஹ் பகலில் அங்கீகரிப்பதில்லை "
பிரயோசனமற்றவை வீணானவைகளிலிருந்து விலகி தவிர்ந்திருப்பது இறை நம்பிக்கையாளர்களின் பண்பாகும். வெற்றியின் அடையாளங்களில் ஒன்றாகவும் இதனை அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
"மேலும் (அவர்கள்) வீணானவற்றை விட்டு விலகியிருக்கின்றார்கள்" (23: 3)
தமக்கு தொடர்பற்ற விவகாரங்களில் தலையிட்டு காலம், நேரம், பொருள், சக்தி, திறன் என்பவற்றை ஒரு முஸ்லிம் ஒருபோதும் வீணடிக்க மாட்டான். அவ்வாறான ஒரு நிலை ஏற்படும் போது அவன்
கண்ணியமாக அதிலிருந்து விலகிக் கொள்வான் என்றே அல்லாஹ் கூறுகின்றான்.
"மேலும் (அருளாளனின் அடியார்கள் யாரெனில்) அவர்கள் பொய் சாட்சியம் கூறுபவர்கள் அல்ல. அவர்கள் ஏதேனும் வீணானவற்றின் அருகே செல்ல நேர்ந்தால் கண்ணியமானவர்களாய்க் கடந்து சென்று விடுவார்கள் (25: 72)
வெற்றிபெற
முயற்சிப்பவன், வாழ்க்கையின் முன்னேற்றம் காண
ஆசை கொண்டவன், இலட்சியத்துடன் வாழ்பவன்
இத்தகையோர் எவரும் ஈருலக வாழ்வுக்கும் பயனளிக்காத வீண் விவகாரங்களில் தம்மை
ஈடுபடுத்திக் கொள்ளமாட்டார்கள்.
ஒரு
முஸ்லிம் தன் சொல், செயல், அனைத்தையும் வீண் கருமங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள
வேண்டும் என்பதே இஸ்லாத்தின் வழிகாட்டலாகும். நபி (ஸல்) அவர்கள் தன் தோழர் அபூதர்
(ரலி) அவர்களுக்கு செய்த உபதேசத்தில்,
"நீர் நீண்டமௌனம் சாதிப்பீராக! அது (மௌனம்) ஷைத்தானை விரட்டக் கூடியதாகும். மேலும் அது உனது மார்க்க விடயத்தில் துணை புரியக் கூடியதுமாகும்" எனக் குறிப்பிட்டார்கள். (அஹ்மத்)
வீணான
பேச்சுக்கள், செயல்கள் மறுமையின் வெற்றி
தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியது என்பதை நாம் தெளிவாக அறிந்திருப்பது அவசியமாகும்.
ஒரு முஃமின் எந்த அளவில் வீண் விடயங்களை தவிர்த் கக் கொள்கிறானோ அந்த அளவிற்கு
இறைவனிடத்தில் உயர் மதிப்பைப் பெற்றுக் கொள்கின்றான்.
ஒரு
மனிதர் மரணப்படுக்கையில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அவரைப் பார்த்து மற்றுமொருவர்
இம்மனிதர் சுவனவாசி எனக் கூறினார். இதனைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள் "எப்படி அவ்வாறு கூறுவீர்? இம்மனிதர் தனக்கு அவசியமற்ற விவகாரங்களில் தலையிட்டு
பேசியிருக்கலாம் அல்லது தனக்கு குறைவை ஏற்படுத்தாததில் உலோபித்தனம் செய்திருக்க
லாம் என்பதை நீர் அறிவீரா?" என வினவினார்கள். (திர்மிதி)
வீண்
விவாதங்கள், விதண்டாவாதங்கள், களியாட்டங்கள் போன்ற வைகளில் இருந்து விலகியிருப்பது
அவசியமாகும். பயனற்ற வகையில் காலத்தை,
நேரத்தை, செல்வத்தை விரயமாக்குவது ஈருலகிலும் நஷ்டத்தை ஏற்படுத்தித்
தருவனவாகும்.
வீண்
விவகாரங்கள், வீணான பேச்சுக்கள் இல்லாத நிலை
சுவன வாழ்வின் உயர்ந்த சௌபாக்கியம் என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
"அங்கு வீணான பேச்சையோ பொய்யுரைகளையோ அவர்கள் செவியுற மாட்டார்கள்" (78: 35)
இந்த
வகையில் வீணானவற்றிலிருந்து விலகி வாழுகின்ற பண்பை நாம் எம்மில் வளர்த்துக்
கொள்வது இம்மையிலும் மறுமையிலும் நமக்கு வெற்றியைக் கொண்டுவரும் என்பதை மனதில்
இருத்திக் கொள்ள வேண்டும். பயன்தரும் விடயங்களில் ஈடுபடுவதோடு வீட்டுக்கும்
நாட்டுக்கும் பயனுள்ளவர்களாக வாழவும் வேண்டும். இளமையிலேயே அவ்வாறான பண்புகளை வளர்த்துப் பேணிவருவது வாழ்வின் முன்னேற்றத்திற்கும் நிம்மதிக்கும் வழிகோலும்.
குறிப்பரை :
இஸ்லாம் - தரம் 7 - பகுதி II, இஸ்லாமிய சமய (தஹம்) பாடசாலைக்குரிய பாடப்புத்தகம்
குறிப்பரை :
No comments:
Post a Comment