Friday, April 10, 2020

நேரம் பேணல்


நேரம் மிகப் பெறுமதியான ஒரு வளமாகும். மனித வாழ்வில் விலை மதிக்க முடியாத செல்வமாக நேரம் காணப்படுகிறது. பொதுவாக எல்லோருக்கும் ஒரே அளவான நேரமே வழங்கப்பட்டுள்ளது. நேரத்தின் மதிப்பு பற்றிய உணர்வு ஒவ்வொருவருக்கும் அவசியமாகும். அப்போதுதான் அவ்வளத்தை சரியாக பயன்படுத்த முடியும்.


அல்லாஹ்வும் நபி ( ஸல் ) அவர்களும் நேரத்துக்கு அதிக முக்கித்துவம் கொடுத்திருப்பதைக் காணலாம் . அல் - குர்ஆனில் அல்லாஹ் முக்கியமான சில விடயங்களின் மீது சத்தியம் செய்திருக்கிறான். அதில் ஒன்று நேரமாகும். இதற்கு பின்வரும் திருமறை வசனங்கள் சான்றாகும்:

 இரவின் மீது சத்தியமாக ! அது மூடி மறைத்துக் கொள்ளும்போது. பகலின் மீது சத்தியமாக அது ஒளிரும் போது. (92 : 1-2) 
"வைகறைப் பொழுதின் மீது சத்தியமாக மேலும் பத்து இரவுகளின் மீதும் (சத்தியமாக)(89:1-2) 
"காலத்தின் மீது சத்தியமாகா" (103 : 1)

 இவ்வாறு பல வசனங்களில் அல்லாஹ் குறித்த நேரங்கள் மீது சத்தியம் செய்திருப்பது அதன் முக்கியத் துவத்தையே வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

இஸ்லாத்தின் அடிப்படை இபாதத் கள் நேரத்துடன் சம்மந்தப்பட்டிருப்ப தும் நேரத்தின் மகிமையையே உணர்த்து கிறது.

அல் - குர்ஆன் "நிச்சயமாக தொழுகை முஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது" . (04 : 103) என்று குறிப்பிட்டுள்ளது .

நபி ( ஸல் ) அவர்களிடம் ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதரே நற்செயல் களிலேயே இறைவன் அதிகம் விரும்புவது எது? ”  என வினவ அதற்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகையை அதற்குறிய நேரத்தில் தொழுவதாகும்என்று பதிலளித்தார்கள் (முஸ்லிம்)

இதேபோன்று ஏனைய அடிப்படை இபாதத்களும் நேரம்,  காலத்துடன் தொடர்புபட்டவையாகவே உள்ளன .

நேரத்தை முறையாக முகாமை செய்து உச்ச அளவில் பயன்படுத்துவோரே சாதனைகளைப் புரிகின்றனர். எந்தத் துறையில் வெற்றி பெற்றவராயினும் அவரது வெற்றிக்குப் பிரதான காரணிகளில் ஒன்றாக அவர் நேரத்தை முறையாக பயன்படுத்தி இருப்பதைக் காணலாம். பலரது வரலாறுகள் இதற்கு சான்று பகர்கின்றன.

ஸைத் பின் தாபித் ( ரழி ) அவர்கள் 10 வயதில் இஸ்லாத்தை ஏற்றார்கள். 12 வயதில் எழுத வாசிக்கக் கற்றுக்கொண்டார்கள். 14 வயதில் பிற மொழிகளைக்கற்றார்கள். 16 வயதி லிருந்து நபி (ஸல்) அவர்களின் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய இவருக்கு 18 வயதில் கிடைத்த பொறுப்பு வழியை எழுதுவதாகும். பின்னர் அல் - குர்ஆனை நூலுருவாக்கும் பொறுப்பும் இவரிடம் இளம் வயதிலேயே ஒப்படைக்கப்பட்டது. எனவே, இவர் நேரத்தை எவ்வாறு கழித்திருப்பார் என்பதை எண்ணிப்பாருங்கள்.
நாற்பது வயதில் மரணித்த இமாம் நவவி அவர்கள் 500க்கும் அதிகமான நூல்களை எழுதியிருக்கிறார் என்றால் அவருடைய நேரமுகாமைத்துவம் எப்படி இருந்திருக்கும்.

உமர் (ரழி) அவர்கள் நேரத்தை எவ்வாறு கழித்தார் என்பது தொடர்பில் அவரே கூறும் போது தூங்குவதற்கு என்னிடம் நேரமில்லை. இரவில் தூங்கினால் இறைவனுக்குச் செய்யவேண்டிய கடமைகளில் தவறிழைத்தவனாக ஆகிவிடுவேன். பகலில் தூங்கினால் மக்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளில் தவறிழைத்தவனாக ஆகிவிடுவேன்என்றார்கள் இவ்விடயம் நேரத்த பெறுமதியை தெளிவாக விளக்குகிறது.

பரீட்சை ஒன்றை எழுதும் போது நேரத்தை நாம் எவ்வளவு பெறும் பார்க்கின்றோமோ அதேபோன்று வாழ்நாள் முழுவதும் நேரம் முக்க என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.

ஈருலகிலும் வெற்றி பெறுவதற்கு நேரத்தை திட்டமிட்டுப் பயன்படுத்துவது அவசியமாகும். மறுமையில் இறைவனால் விசாரிக்கப்படும் முக்கிய ஓர் அம்சமாகவும் நேரம் காணப்படுகிறது. மரணத் தறுவாயில் இருக்கும் மனிதன் தனது வாழ்நாளில் நேரத்தை வீணாகக் கழித்ததன் நிலையை எண்ணி கவலை அடைவான்.

மறுமை நாளில் மனிதனிடம் ஐந்து விடயங்கள் குறித்து விசாரணை நடத்தப் படாதவரை அவன் மஹ்ஷரை விட்டு நகர முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட விடயங்களில் ஒன்றுதான்  “தனது வாழ்நாளை எவ்வாறு கழித்தாய்?”  என்பதாகும் (திர்மிதி). வாழ்நாள் எனும்போது உலகத்தில் எமக்கு வழங்கப்பட்டுள்ள நேரத்தையே அது சுட்டி நிற்கிறது.

அல் குர்ஆனில் அல்லாஹ் "நாம் அவர்களுக்காக (நாட்களை) எண்ணிக் கொண்டிருக்கிறோம். (19 : 84) என்று குறிப்பிடுகிறான். இவ்வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் விளக்கமளிக்கும் போது அவர்களுடைய வாழ் நாள் எண்ணப்படுகிறது என்று கூறினார்கள்.

நாம் இங்கு வீணாகச் செலவு செய்யும் நேரங்கள் பற்றி மறுமையில் அல்லாஹ்வால் விசாரிக்கப்படுவோம் என்ற சிந்தனையுடனேயே நேரத்தைக் கழிக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய வேலைகளை முன்கூட்டியே திட்ட மிட்டு, பணியாற்றுவது நேரத்தை உச்சளவில் பயன்படுத்த உதவும். ஒவ்வொரு நாள் இரவிலும் இன்று திட்டமிட்ட வேலைகளைச் சரியாகச் செய்து விட்டோமா ? செய்யாமல் விடுபட்ட வேலைகள் என்ன வென்று அறிந்து கொள்வது , எதிர்வரும் நாட்களின் வேலைகளை உரிய நேரத்திற்கு செய்து நேரத்தை உச்சளவில் பயன்படுத்த உதவும் . இதனையே இஸ்லாம் (முஹாஸபா) சுய விசாரணை என்று குறிப்பிடுகிறது.

time management tamil
ஓய்வாக இருக்கின்ற நேரங்களில் கூட பிரயோசனமளிக்கின்ற பொழுது போக்குகளில் ஈடுபட வேண்டும் . வீண் விளையாட்டுக்கள் மற்றும் பிரயோச னமற்ற விடயங்களில் ஈடுபடக் கூடாது . பிரயோசனமின்றி பயனற்ற விதத்தில் நேரத்தைக் கழிப்பதிலிருந்தே பாவங்கள் ஆரம்பிக்கின்றன.

இன்று நேரம் ஒரு பெறுமதிமிக்க வளம் என்பதை சற்றும் கவனத்திற் கொள்ளாது எம்மில் பலரும் அதை வீணடிப்பதைக் காண்கிறோம் . வீணான விவாதங்களிலும் மற்றவர்களை தேவையற்ற விதத்தில் விமர்சிப்பதிலும் நேரத்தை வீணடிக்கின்றனர் . இதனால் தங்களது நேரத்தை மட்டுமன்றி ஏனையோரின் நேரத்தை வீணடிப்பதிலும் இவர்கள் ஈடுபடுகின்றனர்

ஒருவர் நேரத்தை சரியாக முகாமை செய்வதற்காக திட்டமிட்டு தனது வலைகளைச் செய்ய வேண்டும் . இஸ்லாம் நேரத்தை பிரயோசனமாக கழிப்பதற்கு காட்டித்தந்துள்ள வழிமுறைகளை அறிந்து கடைப்பிடிக்க வேண்டும் .

எமது சொத்து செல்வங்களை இழந்தால் மீண்டும் முயற்சித்து அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் . ஆனால் இன்று எம்மால் வீணாக இழக்கப்படுகின்ற ஒரு நிமிடத்தைக் கூட இனி ஒரு போதும் எம் வாழ்நாளில் அடைந்து கொள்ள முடியாது . எனவே , அரிய வளமான நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்துவோம்.


No comments:

Post a Comment


Popular Posts