நபியின் நகரம் என்று சிறப்பித்துக் குறிப்பிடப்படுவது மதீனா. நபிகள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்ந்து மறைந்த புனிதமான நகரம் அது.அங்கே ஒரு பெருநாள் தினத்தில் நடந்த நிகழ்ச்சி எங்கள் மனங்களை உருக்கி வைக்கக் கூடியதாக அமைகிறது.
இளம் சிறுவர்கள் புதிய உடைகளை உடுத்தி தங்கள் தந்தைமார், சொந்தக்காரர்களின் கையை பிடித்துக்கொண்டு நபியின் பள்ளிவாசல் என அழைக்கப்படும் மஸ்ஜிதுன் நபவிக்கு செல்கிறார்கள். பிள்ளைகளின் மனங்களில் சந்தோஷம் பொங்கி வழிந்தது.
அப்போது,சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் பிள்ளைகளைக் கண்டு கண் கலங்கி சிறுவன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவனது உடை பழையது, அவன் ஓர் அநாதை, தன்னை ஆதரிக்க எவருமே இல்லையே என ஏங்கி கொண்டிருந்தான்; புதிய உடைகளை உடுத்தி அழகு பார்க்க அவனுக்கு தாயார் இல்லை; குதூகலமாக பள்ளிவாசலுக்கு அழைத்துச் செல்ல தந்தையும் இல்லை,பெருநாளை கொண்டாடும் வசதியும் அவனுக்கு இல்லை.
எத்தனையோ பேர் அவ்வழியாகச் சென்றார்கள். பணக்காரர்களும் போனார்கள். சிலர் அவனை பார்த்துக் கொண்டு சென்றார்கள். பலர் அவனைக் கவனிக்கவும் இல்லை என்ன புதுமை! அவ்வழியே, அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தார்கள். ஆதரவில்லாமல் நிற்கும் சிறுவனைக் கண்டார்கள் அவன் துயரத்தின் காரணத்தை கேட்டார்கள்.
அச்சிறுவன், தன் தந்தை புனித யுத்தத்திற்கு சென்று உயிரிழந்ததையும், பள்ளிவாசலுக்கு தன்னை கூட்டிச்செல்ல தந்தை இல்லையென்பதையும் என்பதையும் தெரிவித்தான். நபிகளின் மனம் உருகியது. தங்களுடைய இரு கைகளாலும் அச்சிறுவனை தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு தங்களின் வீடு சென்றார்கள்.
தங்கள் மனைவியார் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் அச்சிறுவன் ஒப்படைத்து, குளிக்க செய்து, புதிய உடைகளையும் அணிவித்தார்கள். பின்பு அச்சிறுவனிடம் “மகனே நீ துக்கப் பட வேண்டாம். உனக்கு தந்தையாக இதோ நான் இருக்கின்றேன். அருமை தாயாக ஆயிஷா இருக்கிறார். சகோதரியாக பாத்திமா இருக்கிறார். உன்னோடு விளையாடி மகிழ ஹஸன்,ஹுசைன் இருக்கிறார்கள்.” என்றே மிக அன்புடன் சொல்லி அச்சிறுவனை மகிழ்வித்தார்கள். பள்ளிவாசலுக்கும் அழைத்துச் சென்றார்கள்.
அந்த சிறுவனின் மனதில் மகிழ்ச்சி கரை புரண்டோடியது . அவன் மனநிறைவு பெற்றான்.
அல்லாஹுத்தஆலாவின் அருமை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பில் ஒரு பகுதியாவது எம்மிடம் இருக்க வேண்டுமல்லவா!
நுஸ்லா ஜிஹாஸ்
Advertisement
No comments:
Post a Comment