பேச்சு மனிதனுக்கு அல்லாஹ் கொடுத்த அருட் கொடையும் அமானிதமுமாகும்.
அல்-குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:
“எந்தச் சொல்லையும் அவன் சொல்வதில்லை; அதனைப் பாதுகாப்பதற்குத் தயாராக உள்ள ஒரு கண்காணிப்பாளர் அவனிடத்தில் இல்லாத நிலையில்...'' (50:18)
"அன்றைய தினம் நாம் அவர்களுடைய வாய்களில் முத்திரையிட்டு விடுவோம். அவர்களது கைகள் பேசும். அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்கள் பற்றி அவர்களது கால்களும் சாட்சி கூறும். (யாஸீன் 36 : 65)
உரையாடலில் பின்பற்ற வேண்டிய ஒழுங்குகளின் முக்கியத்துவத்தைப் பற்றி இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.
"அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசிக்கின்றவன் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்.'' (புஹாரி, முஸ்லிம்)
உரையாடலின் போது கடைப்பிடிக்க வேண்டிய இஸ்லாமிய ஒழுங்குகள் பற்றி நாம் விளங்கிக் கொள்வோம்.
எமது உரையாடலில் நாம் ஈடுபடு முன், குறிப்பிட்ட விடயத்தைப் பற்றி பேசுவது அவசியமா இல்லையா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவசியம் இல்லையானால் மௌனமாக இருப்பதுவே சிறந்தது. ஏனெனில், தேவையில்லாதபோது பேசாதிருப்பதே பெரும் நன்மை தரும் இபாதத்தாகும்.
இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் மீது ஆணையாக, உலகில் அதிகூடிய காலம் சிறையில் அடைத்து வைக்கப்பட வேண்டுமென்ற ஒன்று இருக்குமாயின் அது நாவேயாகும்.''
வீண் பேச்சுக்களில் ஈடுபடுவது, அரட்டை அடிப்பது எத்தகைய தேவையுமின்றி வெறுமனே பேசிக் கொண்டிருப்பது என்பவைகளைத் தவிர்க்க வேண்டும்.
"நீ அதிகம் மௌனமாய் இருந்து கொள். ஏனெனில், அது ஷைத்தானை விரட்டுவதாகவும் உனது மார்க்க விவகாரத்தில் உனக்கு உதவி புரியக் கூடியதாகவும் இருக்கும்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூதர் அல்கிபாரி (ரழி) அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள்.
வீணான, கேளிக்கைக்குரிய விடயங்களை எமது உரையாடல்களில் தவிர்ப்பதை இஸ்லாம் இறை விசுவாசிகளின் முக்கிய பண்பாகவும், வெற்றிக்குரிய காரணியாகவும் பார்க்கின்றது. "ஒரு மனிதன் தனக்கு அவசியமற்ற விவகாரத்தில் தலையிடாது விட்டு விடுவது இஸ்லாத்தில் சிறந்ததோர் அம்சமாகும்" என நபிமொழி கூறுகிறது.
ஏனெனில், வீணாக நாம் பேசிக் கொண்டிருக்கும் போது எம்மை அறியாமலேயே பெரும் பாவச்செயல்களை செய்யக் கூடிய சந்தர்ப்பங்கள் அமைந்து விடலாம். இதனையே கீழ்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
"நிச்சயமாக ஓர் அடியான் தான் இருக்கின்ற கூட்டத்தினர் சிரிப்பதற்காகவே பேசினால், அவன் வானம் பூமிக்கிடையில் உள்ள அளவு விழுந்து விடுகின்றான். மனிதன் தனது பாதங்களினால் சறுக்கி விழுவதைவிட அதிகமாக நாவினாலேயே சறுக்கி விழுகின்றான்." (பைஹகி)
அத்துடன் நாம் பிறருடன் உரையாடும்போது மலர்ந்த முகத்துடன் மென்மையான சொற்களைக் கொண்டு இனிய குரலில் உரையாட வேண்டும். அளவாகப் பேசுவதோடு ஒருவருக்குக் கேட்கக் கூடியளவுக்கு குரலைக் கட்டுப்படுத்தி தாழ்த்திப் பேசுதல் வேண்டும். முரட்டு சுபாவத்தோடு மிக உரத்த குரலிலும் பேசக் கூடாது. அல்லாஹ் பனூ இஸ்ரவேலர்கள் மீது விதித்த கடமைகளுள் இதுவும் ஒன்றாகக் குறிப்பிடுகின்றான்.
“நீங்கள் மனிதர்களுக்கு நல்லதையே கூறுங்கள்.” (1:83)
“உன்னுடைய குரலைச் சற்று தாழ்த்திக்கொள். நிச்சயமாக அனைத்துக் குரல் களிலும் மிகவும் அருவருப்பானது, வெறுக்கத்தக்கது கழுதைகளின் குரலாகும்." (31 : 19)
எமது உரையாடல் மனோ இச்சையின்படி சென்று தீமைகளை உருவாக்கி விடாமலிருக்க இஸ்லாம் வாதாடுவதைத் தடை செய்கிறது. ஏனெனில், வாதாட்டம் ஒவ்வொரு வரும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வையே உண்டாக்கும். சத்தியத்தை உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் இதனால் இல்லாமல் போய்விடும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''நேர்வழி பெற்றதன் பின் ஒரு சமூகம் வழி கெடுமாக இருந்தால் அது வாதாட்டத்தின் மூலமேயாகும்." (திர்மிதி)
எமது உரையாடல்களில் மற்றொரு விடயம் பாதை ஓரங்களிலும் சந்தை களிலும் உட்கார்ந்திருந்து பாதைக்குரிய உரிமைகளை வழங்காமல் வீணாகப் பேசிப் பேசிக் காலம் கழிப்பதாகும். பார்வையைத் தாழ்த்துதல், தீங்கிழைப் பதை தவிர்ந்து கொள்ளுதல், ஸலாத்திற்கு பதில் அளித்தல், நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் போன்ற ஒழுங்குகளைப் பேணி பாதையில் நடந்து கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் உபதேசித்திருக்கிறார்கள்.
தீய பேச்சுக்களை இஸ்லாம் தடுக்கின்றது. பிறருடைய தீமைகளை, குறை களைக் கூறிக்கொண்டிருப்பது, புறம் பேசுவது, பிறரை எள்ளி நகையாடுவது, பொய் வாக்குறுதியளிப்பது, பிறரைப் பரிகசிப்பது, பட்டப் பெயர் சூட்டுவது, புறம் பேசுவது, கோள் மூட்டுவது, பிறரின் இரகசியங்களைப் பகிரங்கப் படுத்துவது, பிறர் பேச்சை ஒற்றுக் கேட்பது போன்றன முற்றிலும் தவிர்க்க வேண்டிய விடயங்களாகும்.
அவ்வாறே அறிவற்ற மூடர்களை எதிர்கொள்ள நேரிட்டால் பொருத்தமான வகையில் ஸலாம் கூறி அவர்களை விட்டு ஒதுங்கிக் கொள்ளுமாறும் வீணான சர்ச்சைகளில் சிக்குவதைத் தவிர்க்குமாறும் இஸ்லாம் போதிக்கின்றது.
எமது உரையாடல் ஒழுங்குகளே எம்மை யாரென்று சரியாக காட்டிக்கொடுத்து விடும். எனவே தமது அந்தஸ்துக்கும் மரியாதைக்கும் பொருத்தமற்ற விடயங்களை பேசுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு பேர் உரையாடும் போது அவர்களின் அனுமதியின்றி மூன்றாம் நபராக நாம் இடையில் புகுந்து விடக்கூடாது. மேலும் மற்றவரின் பேச்சை இடைமறித்து பேசுவதை விட்டுவிட வேண்டும். நிறுத்தி நிறுத்தி நிதானமாக கண்ணியமான முறையில் உரையாடுதல் வேண்டும். படபடப்புடன் வேகமாகப் பேசுவதையும் எப்போதும் பரிகாசமாகவும், விகடமாகவும் பேசுவதைத் தவிர்ப்பதோடு மற்றவர்கள் பேசி முடியும் வரை பொறுமையாக காது தாழ்த்திக்கேட்பதும் உயர்ந்த பண்பாடாகும்.
ஒருவர் எம்மோடு பேசிக் கொண்டிருக்கும் போது இது எனக்குத் தெரிந்த விஷயமே எனக் கூறக்கூடாது. உரையாடுபவரின் வயது, தகுதி போன்றவற்றை கருத்திற்கொண்டு உரையாடுதல் வேண்டும். நண்பர்களுடன் பேசுவது போன்ற ஆசிரியர் மற்றும் பெரியவர்களுடன் பேசக்கூடாது. அவர்களுடன் மரியாதையாக குரலைத் தாழ்த்தி அமைதியாக உரையாடுதல் வேண்டும். சிறுவர், சிறுமிகளோடு உரையாடும்போது பாசத்துடனும், கனிவுடனும் நளினமான முறையில் உரையாடுதல் வேண்டும். இயன்ற வரை நாம் அதிகமாகப் பேசாது மற்றவர்கள் பேசுவதை அதிகம் செவி தாழ்த்திக் கேட்பவர்களாக மாற வேண்டும்.
இஸ்லாம் முன்வைத்துள்ள உரையாடல் ஒழுங்குகளை எமது வாழ்வில் நடைமுறைப்படுத்தி வாழ்வை வெற்றிகரமாக அமைத்துக் கொள்ள திடசங்கற்பம் பூணுவோம்.
குறிப்பரை :
இஸ்லாம் - தரம் 9 - பகுதி II, இஸ்லாமிய சமய (தஹம்) பாடசாலைக்குரிய பாடப்புத்தகம்
No comments:
Post a Comment