Friday, April 17, 2020

நோயாளர்களைத் தரிசித்தல்


ஒரு மனிதர் நோயுற்றால் அவரது மனதில் கவலை, சஞ்சலம் குடிகொள் வது இயல்பாகும். அதிலும் பாரிய நோயாக இருந்தால் அது பற்றிக் கதைக்கவே தேவையில்லை என்றாகிவிடும். நோயாளியைப் போலவே அவரது குடும்பத்தின் நிலையும் ஆட்டங்கண்டு விடும். அதிலும் நோயாளி வீட்டின் பிரதானியாக இருந்தால் ஏற்படும் பாதிப்பு இன்னும் அதிகமாகும்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் யாராவது குறித்த நோயாளியிடம் அல்லது அவரது குடும்பத்தவர்களிடம் சென்று அவர்களது மனதை குளிர வைக்கும் விதமாக ஓரிரண்டு வார்த்தைகள், மற்றும் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்கின்ற போது அவர்களுக்கு அது ஆறுதலாக அமைகிறது.

எவரேனும் நோயுற்றால் அவரிடம் உடல் நலம் விசாரிப்பதை இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறே நோய் விசாரிக்கச் சென்றவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டலையும் வழங்கியுள்ளது. நோயாளியைச் சந்திக்கச் செல்பவர் அவரின் உடல் நிலைபற்றி விசாரித்து அவரது நோயிகள் குணமடைய அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். மேலம் நோய் என்பது இறைவனால் எமக்கு வழங்கப்படும் ஒரு தற்காலிக நிலையே அன்றி இது தான் நிரந்தரம் என்று நாம் நினைத்துவிடக் கூடாது.

இந்த சந்தர்ப்பத்தில் பொறுமையையும் தொழுகையையும் கொண்டு அல்லாஹ்விடம் உதவி தேட வேண்டும் போன்றன பற்றிய விடயங்களையே அவர்களுடன் பேச வேண்டும். அவ்விடத்தில் எந்த வார்த்தைகளைப் பேசினால் குறித்த நோயாளியின் மனம் சந்தோசமடையுமோ, அவரது குடும்பத்தவர்களுக்கு ஆறுதல் கிடைக்குமோ அவற்றை மாத்திரமே பேச வேண்டும். மாறாக அவர்களது உள்ளத்தில் கவலை, சஞ்சலம் ஏற்படும் வார்த்தைகளை உபயோகிப்பது கூடாது.

ஒரு காட்டரபி நோய்வாய்ப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் அவரை உடல் நலம் விசாரிக்கச் சென்றிருந்தார். நபி அவர்கள் நோயாளிகளை உடல் நலம் விசாரிக்கச் சென்றால் “லாபஃஸ தஹுருன இன்ஷா அல்லாஹ்" அல்லாஹ் நாடினால் குணமாகும் எனக் கூறுவார்கள். (புஹாரி)

"ஒரு முஸ்லிம் மீது மற்றைய முஸ்லிமுக்கு ஐந்து கடமைகள் காணப் படுகின்றன. ஸலாம் கூறினால் பதில் கூறுதல், நோயாளியை உடல் நலம் விசாரித்தல், ஜனாஸாவைப் பின் தொடர்தல், விருந்திற்காக அழைத்த வருக்குப் பதிலளித்தல், தும்மியவருக்கு துஆச் செய்தல்” எனக் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

"நிச்சயமாக கியாமத் நாளில் இறைவன் ஆதமின் மகனே, நான் நோய் வாய்ப்பட்டிருந்தேன். நீ ஏன் என்னை உடல் நலம் விசாரிக்க வரவில்லை ?" எனக் கேட்பான் அப்பொழுது அடியான்: 
"எனதிரட்சகா, நான் உன்னை எவ்வாறு நோய் விசாரிக்க முடியும்? நீயோ அனைத்துலக இரட்சகனாக உள்ளாயே?” எனப் பதில் கூறுவான். அதற்கு இறைவன் "என் அடியான் நோய் வாய்ப்பட்டிருந்தான், அவனை நீ உடல் நலம் விசாரிக்கச் செல்லவில்லை என்பதை நீ அறிவாயா? நீ அவனை உடல் நலம் விசாரிக்கச் சென்றிருந்தால் அவனிடம் நீ என்னைக் கண்டு கொண்டிருப்பாய் என்பதை நீ அறிவாயா?” எனக் கூறுவான். (முஸ்லிம்)



குறிப்பரை :
இஸ்லாம் - தரம் 8 - பகுதி II, இஸ்லாமிய சமய (தஹம்) பாடசாலைக்குரிய பாடப்புத்தகம்

No comments:

Post a Comment


Popular Posts